×

ஆமை வேகத்தில் இயக்கப்பட்ட தீபாவளி சிறப்பு ரயில்: தென்மாவட்ட ரயில் பயணிகள் கடும் அவதி

நெல்லை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் இருந்து தென்காசி வழியாக தாம்பரத்திற்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் ஆமை வேகத்தில் சென்றதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாயினர். தீபாவளி பண்டிகை முன்னிட்டு நெல்லையிலிருந்து தென்காசி வழியாக சிறப்பு ரயில் இயக்க பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தெற்கு ரயில்வே சார்பில், நெல்லையில் இருந்து, அம்பை, தென்காசி, ராஜபாளையம், மதுரை, திருச்சி வழியாக, சென்னை தாம்பரத்திற்கு நேற்று மாலை சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. வண்டி எண் 06058 என்ற இந்த சிறப்பு ரயிலில் 9 ஸ்லீப்பர் கோச்சுகளும், 2 ஏசி கோச்சுகளும், 7 முன்பதிவு இல்லாத பெட்டிகளும் ஆக மொத்தம் 18 பெட்டிகளோடு சென்றது. நெல்லையில் இருந்து மாலை 3:45 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில், சேரன்மகாதேவியில், செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயிலுக்காக, 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அம்பை ரயில் நிலையத்தில், செங்கோட்டை- தாம்பரம் அதிவேக ரயிலுக்காக, 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் புறப்பட்டு மாலை 5:45 மணிக்கு தென்காசி சென்றடைந்தது, அங்கு இந்த ரயிலில் இன்ஜின் கழட்டி மாற்றப்பட்டு, பொதிகை ரயிலுக்காக சுமார் 1½ மணி நேரம் நிறுத்தப்பட்டு இருந்தது. மாலை 6:40 மணிக்கு செங்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் பொதிகை ரயில் ஆனது தென்காசியை கடந்து சென்றதும், இந்த தீபாவளி சிறப்பு ரயிலானது இரவு 7:15 மணிக்கே, அங்கிருந்து 1½ மணி நேரம் காத்திருந்து புறப்பட்டு சென்றது. பின்னர் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில், மயிலாடுதுறை- செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் விருதுநகருக்கு இரவு 10 மணிக்கு சென்ற இந்த ரயிலானது, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் தினசரி ரயில்களுக்காக, அங்கு 40 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 11:45 மணிக்குத்தான் மதுரை ரயில் நிலையத்தை விட்டு கடந்து சென்றது.

நெல்லையிலிருந்து மதுரை ரயில் நிலையத்தை கடந்து செல்வதற்கு இந்த ரயில் எடுத்துக்கொண்ட நேரம் 8 மணி நேரத்தை தாண்டியதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். மேலும் இன்று காலை 7. 30 மணிக்கே சென்னை தாம்பரம் சென்று அடைந்தது. இதனால் இந்த ரயிலில் பயணித்த பயணிகள் பேருந்துகளைப் பிடித்து, தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டு, பின்னர் அங்கிருந்து தங்களது அலுவலகம் செல்ல காலதாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து முன்பதிவற்ற பெட்டிகளில் பயணம் செய்த நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ரயில் பயணிகள் கூறும்போது, ‘‘நெல்லையிலிருந்து 72 கிலோமீட்டர் தூரம் உடைய தென்காசி ரயில் நிலையத்தை கடந்து செல்வதற்கே, இந்த தீபாவளி சிறப்பு ரயிலானது 3.30 மணி நேரம் எடுத்துக் கொண்டது மிகவும் வேதனை அளிக்கிறது. சாதாரண பாசஞ்சர் ரயில்கள் கூட ஒன்றரை மணி நேரத்தில் போய் சேருகிறது. மேலும் நெல்லையில் இருந்து மதுரை செல்வதற்கு 8 மணி நேரம் ஆனதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானோம்.

மொத்தத்தில் நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு சென்றடைய, சுமார் 15.30 மணி நேரம் ஆனது. மாட்டுவண்டி வேகத்தில் இந்த ரயில் இயக்கப்பட்டதால் எங்களால் குறித்த நேரத்தில் சென்னையை சென்று அடைய முடியவில்லை.’’ என்றனர். மேலும் அடுத்த முறை இதுபோன்ற பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கும்போது, நெல்லையில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, காலை 6 மணிக்குள் சென்னை சென்றடையும் வகையில், முறையான கால அட்டவணை தயாரித்து இயக்கப்பட வேண்டும். அப்படி இயக்கினால் மட்டுமே, இனி வரும் காலங்களில் தென்மாவட்டத்தில் உள்ள ரயில் பயணிகள் பண்டிகை கால சிறப்பு ரயில்களில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டுவர். இல்லையென்றால் கூடுதல் செலவானாலும் பரவாயில்லை என பேருந்துகளில் பயணித்துவிடுவர்.எனவே பண்டிகை காலங்களில் முன்கூட்டியே முறையான திட்டமிட்டு, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.

The post ஆமை வேகத்தில் இயக்கப்பட்ட தீபாவளி சிறப்பு ரயில்: தென்மாவட்ட ரயில் பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Diwali ,South district ,Nellai ,Tambaram ,Tenkasi ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...